உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கட்டாய கல்வியில் மாணவர்களை சேர்க்க முடியாமல் ஏமாற்றம்! விண்ணப்பிக்க காத்திருந்த பெற்றோர்கள் புலம்பல்

கட்டாய கல்வியில் மாணவர்களை சேர்க்க முடியாமல் ஏமாற்றம்! விண்ணப்பிக்க காத்திருந்த பெற்றோர்கள் புலம்பல்

கடலுார்; கட்டாய கல்வி சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு கிடையாது என அரசு கைவிரித்துவிட்டதால் கடந்த 2 மாதங்களாக சிறந்த தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என காத்திருந்த பெற்றோர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் 4 ஆகஸ்ட் 2009 முதல் லோக்சபாவில் இயற்றப்பட்டது. இந்த கல்வி உரிமைச் சட்டம் இந்தியாவில் 6 மற்றும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 25 சதவீதிம் இட ஒதுக்கீடு கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.இந்த சட்டம் ஏப்ரல் 1 2010 லில் இருந்து இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்தது. அனைத்து தனியார் பள்ளிகளும் நலிவடைந்த குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடங்களில் முன்பதிவு செய்ய வேண்டும். பள்ளிக்கு அருகாமையில் வசிப்போர்கள், ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். மைனாரிட்டி பள்ளிகளுக்கு இக் கல்விச்சட்டம் பொருந்தாது. பிரபலமான தனியார் பள்ளிகளுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் மூலமாக நேரில் வந்து குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கை வழங்கப்பட்டு வந்தது.இந்த திட்டத்தினால் மாணவர்கள் மட்டும் அல்லாமல் சில கிராமப்புறத்தில் உள்ள பின் தங்கிய பள்ளிகளும் பயன்பெற்று வந்தன. மாணவர்கள் சேர்க்கை வழங்கும் பள்ளிகளுக்கு மத்திய அரசு மூலம் கல்விக்கட்டணம் வழங்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகள் சிறப்பாக வழங்கப்பட்டு வந்த இந்த கட்டணம் தற்போது 23-24,- 24-25ம் ஆண்டுகளுக்கான கட்டணம் மத்திய அரசால் நிறுத்தப்பட்டுள்ளது. கட்டாய கல்வியில் சேர்ந்து படித்த மாணவர்கள் தாம் படித்த பள்ளிகளுக்கு இன்னும் அரசு கட்டணம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. அதாவது புதிய கல்விக்கொள்கையை தமிழகத்தில் ஏற்காததால் அது தொடர்பான நிதியை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. கட்டாய கல்விக்காக தமிழக பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டியது 600 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. அதனால் இந்த ஆண்டு கட்டாய கல்வி ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கவே முடியாமல் போனது. விண்ணப்பிக்க பல முறை ஆன்-லைனில் முயற்சி செய்து பார்த்துவிட்டு பெற்றோர்கள் கைவிட்டுவிட்டனர்.வழக்கம் போல் பள்ளிகள் கடந்த ஜூன் 2ம் தேதி திறக்கப்பட்டது. கட்டாய கல்விக் குறித்து கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டபோது, கட்டாய கல்வி சட்டத்தில் மத்திய அரசு 600 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இது குறித்து முதல்வர் மூலமாக வழக்கு தொடர உள்ளோம். அதன் பின்னர் கட்டாய கல்வி நடைமுறைபடுத்தப்படும் என்றார். கடந்த 2 மாதங்களாக பெரும் கனவுகளோடு கட்டாய கல்வியில் கண்டிப்பாக சேர்க்க முடியும் என காத்திருந்த பெற்றோர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை