வடிகால் வாரிய அதிகாரிகள் உறக்கம்: ஓராண்டாக குடிநீர் வீண்
சிதம்பரம்: சிதம்பரம் அருகே, கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக, கூட்டு குடி நீர் திட்டத்தில் கீழ் கொண்டு செல்லப்படும், குடிநீர் பைப் உடைந்து தண்ணீர் வீணாகி வருவதுடன், சாலை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம், கொள்ளிடம் ஆற்றில் மெகா போர் அமைத்து, கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி - அனுவம்பட்டு சாலையில், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், கிள்ளை வரை செல்லும் பைப் லைன் உடைந்து கடந்த ஒரு ஆண்டாக தண்ணீர் வீணாகி வருகிறது. பல முறை இது குறித்து புகார் தெரிவித்தும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள கண்டுகொள்ளவில்லை. கடந்த ஒரு ஆண்டாக, தொடர்ந்து சாலையில் தண்ணீர் வெளியேறி வருவதால், அப்பகுதி சாலை முழுவதும் வீணாகி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்துள்ளனர். அதிலும் இரவு நேரத்தில் மேடு பள்ளம் தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. கடலுார் மாவட்டத்தில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், இதுபோன்ற புகார்களை அலட்சியப்படுத்தி வருவதால், சாலைகள் வீணாவது, பொதுமக்கள் பாதிக்கப்படுவது, குடி நீர் பைப் லைனில் கழிவு நீர் கலப்பது போன்ற பல்வேறு தொந்தரவுகள் ஏற்படுகிறது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் போர்கால அடிப்படையில் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும்.