ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை கரும்பு நடவுக்கு மானியம் வழங்கல்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை ஆண்டுக்கு 10 லட்சம் டன்னுக்கு மேல் கரும்பை விவசாயிகளிடம் வாங்குகின்றனர். அறுவடை முடிந்த 14 நாட்களில் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு ஒரே தவணையில் பணம் அனுப்புகின்றனர்.மேலும், விவசாயிகள் வங்கி கடன் பெற உதவுகின்றனர். கரும்பு நடவில் விவசாயிகள் ஈடுபடுவதற்காக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்குகின்றனர்.வரும் 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் முடியும் வரை நடவு செய்யும் விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்களை அறிவித்துள்ளனர். கரும்பு நடவு முதல் அறுவடை வரை இயந்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் ஆட்கள் தேவையை குறைக்க முடியும் என்பதை விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.சொட்டு நீர் பாசனம் போன்ற பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கின்றனர். மண் வளத்தை அதிகரிக்க இயற்கை உரம், பொட்டாஷ் போன்ற உரங்களை குறைந்த விலையில் வழங்குகின்றனர். அறுவடை பணியை எளிமையாக்க அதிகளவு கரும்பு அறுவடை இயந்திரங்களை கொண்டு வந்துள்ளனர். இதனால் கரும்பு அறுவடை பணி எளிதாகியுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் கரும்பு அறுவடை செய்யப்படுவதாலும் நிலையான விலை கிடைப்பதாலும் விவசாயிகள் கரும்பு நடவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். 200 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் இந்த ஆலையால் பல ஆயிரம் விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.