வாகனம் மோதி மூதாட்டி பலி பா.ஜ., சாலை மறியல்
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி குறித்து தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சாலை மறியல் செய்தனர். ஸ்ரீமுஷ்ணம் தெற்கு ரத வீதியில் சுற்றித் திரிந்த அடையாளம் தெரியாத 75 வயது மூதாட்டி கடந்த 14ம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தார். அருகில் இருந்தவர் கள், மீட்டு தனியார் மருத்துவனையில் சேர்த்தனர். பின், சிகிச்சை முடிந்து மூதாட்டி அதே பகுதியில் சாலையோரம் ஒரு கடையின் எதிரில் கேட்பாரற்று கிடந்தார். நேற்று மூதாட்டி திடீரென இறந்தார். இதனையறிந்த பா.ஜ., முன்னாள் ஒன்றிய தலைவர் லோகு செந்தில் மற்றும் சிலர் சம்பவ இடத்தில் திரண்டு மூதாட்டி உடல் நிலை பாதிக்கப்பட்ட போது, தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் வராததை கண்டிப்பதாக கூறி சாலை மறியல் செய்தனர். ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையேற்று மறியல் கைவிடப்பட்டது. விசாரணையில், இறந்தவர் அரியலுார் மாவட்டம், மீன்சுருட்டியை சேர்ந்த பூங்கோதை என்பதும், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ரெட்டிபாளையத்தில் உறவினர் வீட்டில் தங்கி இருந்ததும் தெரிந்தது. கடந்த சில ஆண்டுகளாக யாரும் ஆதரவு இல்லாத நிலையில், சுற்றித் திரிந்ததும் தெரிந்தது.