மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணி வேளாண் துணை இயக்குநர் ஆய்வு
கடலுார் : குமராட்சி வட்டாரத்தில் மின்னணு பயிர் கணக் கெடுப்பு பணியை வேளாண்மை துணை இயக்குநர் விஜயராகவன் ஆய்வு செய்தார். குமராட்சி வட்டாரத்தில் பெராம்பட்டு, கடவா ச்சேரி, சிவபுரி உட்பட 89 வருவாய் கிராமங்களில் மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இப்பணியை, வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) விஜயராகவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 'காரீப் பருவ மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் பயிர்கள் சாகுபடி மற்றும் உற்பத்திகள் துல்லியமாக கணக்கீடு செய்து, புள்ளி விவரங்கள் சேகரித்து, அரசின் நலத்திட்டங்கள் வழங்க பயன்படுத்தப்படுகிறது' என்றார். மேலும், இப்பணியில் ஈடுபட்டுள்ள சர்வேயர்கள், வேளாண்மை அலுவலர்களிடம் தற்போது சாகுபடியில் உள்ள நெல், பருத்தி, கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்களான வாழை, கத்தரி, வெண்டை சாகுபடிகள் அனைத்து உட்பிரிவுகள் விடுபடாமல் புல எண்கள் பதிவை டி.சி.எஸ்., செயலியில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தினார். தொடர்ந்து, வேளாண் திட்ட இலக்குகள் மற்றும் அவற்றின் செயல்பாடு, முன்னேற்ற நிலை குறித்து ஆய்வு செய்தார். குமராட்சி வேளாண்மை உதவி இயக்குநர் தமிழ்வேல், துணை வேளாண்மை அலுவலர் தெய்வசிகாமணி, உதவி வேளாண்மை அலுவலர் மாலினி உடனிருந்தனர்.