தொழிலாளி குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ., உதவித்தொகை
கடலுார்: கடலுாரில் விபத்தில் உயிரிழந்த செக்யூரிட்டி குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ., சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது. கடலுாரில் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்தவர் ரவிச்சந்திரன். இவர் கடந்த ஏப்., 16ம் தேதி வீட்டில் இருந்து பணிக்காக கடலுார் செல்லும் போது சாலை விபத்தில் இறந்தார். தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின், காப்பீட்டு தொழிலாளியான ரவிச்சந்திரன் குடும்பத்தினருக்கு சார்ந்தோர் உதவித்தொகை அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. கடலுார் இ.எஸ்.ஐ., கிளை அலுவலக மேலாளர் லுார்துசாமி, சார்ந்தோர் உதவித்தொகை ஒப்புதல் ஆணையை ரவிச்சந்திரன் மனைவி கொளஞ்சியிடம் வழங்கினார். ஏப்., 18ம் தேதி முதலான பென்ஷன் தொகை ரவிச்சந்திரன் மனைவி கொளஞ்சி, மகள் குணவர்ஷினி மற்றும் மகன் சித்தார்த் ஆகிய மூவருக்கும் மொத்தமாக 63 ஆயிரத்து 210 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும் மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கில் பென்ஷன் தொகை செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.