உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஏரிகளை துார்வார விவசாயிகள் கோரிக்கை

ஏரிகளை துார்வார விவசாயிகள் கோரிக்கை

புவனகிரி : புவனகிரி அருகே 4 ஏரிகள் புதர் மண்டி கிடப்பதை துார்வார வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா பகுதியான கடலுார் மாவட்டத்தில், மேட்டூர் தண்ணீரை சேத்தியாத்தோப்பு வாலாஜா ஏரியில் தேக்கி அங்கிருந்து பாசன கிளை வாய்க்கால்கள் மூலம் சொக்கன்கொல்லை, குமுடிமூலை மற்றும் நத்தமேடு ஏரிகளில் தேக்கியும், அணைக்கட்டில் இருந்து நேரடியாக சாத்தப்பாடி ஏரியில் தேக்கியும் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. 150 ஏக்கர் பரப்பில் உள்ள புவனகிரி, சாத்தப்பாடி ஏரி மூலம் 1,500 ஏக்கரும், 70 ஏக்கர் பரப்பில் உள்ள சொக்கன்கொல்லை ஏரி மூலம் 1,250 ஏக்கரும், 100 ஏக்கர் பரப்பில் உள்ள குமுடிமூலை ஏரியில் இருந்து 1,500 ஏக்கர், 85 ஏக்கர் பரப்பில் உள்ள நத்தமேடு ஏரியில் இருந்து 1,000 ஏக்கர் என மொத்தம் 5, 250 ஏக்கர் ஆண்டு தோறும் பாசன வசதி பெறுகின்றன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று என்.எல்.சி., நிர்வாகம் ஏரிகளை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் துார்வாரி கரையை பலப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து மழை காரணமாக ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவு அதிகாரிகள், 4 ஏரிகளையும் துார்வாராமல் உள்ளனர். இதனால், ஏரிகள் பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுவதுடன் நீர்மட்டம் குறைந்துள்ளது. எனவே, ஏரிகளை துார்வார வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை