காப்பீடு தொகை வழங்க விவசாயிகள் மனு
சிதம்பரம்; புயல் பாதிப்பிற்கு காப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர் கற்பனைச்செல்வம், ஒன்றிய செயலாளர் கொளஞ்சியப்பன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு:கிள்ளை தெற்கு, நஞ்சைமகத்து வாழ்க்கை கிழக்கு, மேற்கு உள்ளிட்ட கிராமங்களில் கன மழை மற்றும் பெஞ்சல் புயலால் நெல் மகசூல் பாதித்தது. இப்பகுதிகளில் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு சரியாக எடுக்காததால் இதுவரை விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்கவில்லை. கீழமணக்குடி, வயலாமூர், குறியாமங்கலம் உள்ளிட்ட கிராமங்களிலும் பயிர் காப்பீடு கணக்கெடுப்பில் குளறுபடி நடந்ததால் சில பேருக்கு மட்டுமே காப்பீடு தொகை வந்துள்ளது. மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே, புயல் பாதித்த விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.