உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூட்டத்தில் அதிகாரிகள் மிஸ்சிங் விருதை விவசாயிகள் வெளிநடப்பு

கூட்டத்தில் அதிகாரிகள் மிஸ்சிங் விருதை விவசாயிகள் வெளிநடப்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் கோட்ட குறைகேட்பு கூட்டத்தில், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்காததால், அதிருப்தியடைந்த விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்தனர். விருத்தாசலம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாதந்தோறும் நடக்கிறது. நேற்று ஆர்.டி.ஓ., பங்கேற்காத நிலையில், நேர்முக உதவியாளர் அந்தோணிராஜ் தலைமையில் 11:30 மணிக்கு கூட்டம் துவங்கியது. அதிருப்தியடைந்த விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தும், விவசாயிகள், கூட்ட அரங்கில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவம், விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சக்திவேல் கூறுகையில், 'ஆர்.டி.ஓ., பொறுப்பேற்ற நாளில் இருந்து இதுவரை விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால், வனத்துறை, வேளாண் மற்றும் பொறியியல் துறை உள்ளிட்ட கோட்ட அளவிலான அதிகாரிகள் யாரும் பங்கேற்காமல், உதவியாளர்களை அனுப்புகின்றனர். நாங்கள் குறைகளை தெரிவித்தாலும், உடனடியாக பதில் தெரிவிக்க முடியாமல் காலம் கடத்துகின்றனர். விவசாயிகள் கஷ்டத்தை தவிர்க்கும் வகையில் கோட்ட வாரியாக கூட்டம் நடத்தினாலும், அதிகாரிகள் அலட்சியம் காரணமாக நடைமுறைக்கு வருவது இல்லை. மாதந்தோறும் இரண்டாவது வெள்ளிக்கிழமை என அறிவிக்கப்பட்ட குறைதீர்வு கூட்டம், அதிகாரிகள் வசதிக்காக இன்று (நேற்று) மாற்றப்பட்டது. எந்த அதிகாரிகளும் பங்கேற்காததால், கூட்டத்தை புறக்கணித்து விட்டோம். இனி வருங்காலத்தில் கலெக்டர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளோம்' என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ