கூத்தாண்டவர் கோவிலில் வரும் 10ம் தேதி திருவிழா
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் திருவிழா வரும் 10ம் தேதி நடக்கிறது. கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை கிராமத்தில், பிரசித்திப் பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் திருநங்கைகள் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. மும்பை, கேரளா, பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், சென்னை, ஈரோடு, சேலம், கோயம்புத்துார், திருப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திருநங்கைகள், கிராம மக்கள் 10,000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பர். கொரோனா தொற்று மற்றும் கோவில் புதுப்பிக்கும் பணி நடந்ததால், கடந்த 5 ஆண்டுகளாக திருநங்கைகள் திருவிழா நடக்கவில்லை. இந்தாண்டு, திருநங்கைகள் திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 6ம் தேதி அர்ச்சுனன், திரவுபதி திருக்கல்யாண உற்சவம், 9ம் தேதி சாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய விழாவாக வரும் 10ம் தேதி இரவு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் திருநங்கைகளுக்கு, கோவில் முன்பு தாலிக்கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. 11ம் தேதி திருத்தேர் உற்சவம், 64 அங்க லட்சணம் பொருந்திய அரவான் களப்பலி நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.