உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கப்பல் இறங்குதளத்தில் தஞ்சமடைந்த மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

கப்பல் இறங்குதளத்தில் தஞ்சமடைந்த மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

கடலுார்: கடலுாரில் கடலில் படகு கவிழ்ந்ததால், கப்பல் இறங்குதளத்தில் தஞ்சமடைந்த மீனவர்கள், கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.கடலுார் முதுநகர் தைக்கால் தோணித்துறையை சேர்ந்தவர்கள் மணிக்கண்ணன்,35; தமிழ்வாணன்,37; சாமிதுரை,63; மணிமாறன், 30; தினேஷ்,29; சற்குணன், 23. இவர்கள் 6 பேரும் நேற்று முன்தினம் காலை 11:30 மணியளவில் சித்திரைப்பேட்டை அருகிலுள்ள கப்பல் இறங்குதளத்தில் (ஜெட்டி) கட்டியிருந்த, தங்களது மீன்பிடி வலையை எடுக்க, இரண்டு படகுகளில் சென்றனர்.கடல் சீற்றம் காரணமாக அவர்கள் சென்ற படகு கவிழ்ந்தது. இதனால். தண்ணீரில் விழுந்து தத்தளித்த அவர்கள், அருகே இருந்த தனியார் கப்பல் இறங்குதளத்தில் தஞ்சமடைந்தனர். கடல் அலை சீற்றம் காரணமாக, அவர்களை படகுகளில் சென்று மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. தனியார் கப்பல் இறங்குதளத்தில் 6 மீனவர்களுடன், தனியார் நிறுவன ஊழியர்கள் நான்கு பேர் தங்கியுள்ளனர். இந்நிலையில் மீனவர்களை மீட்பது குறித்து உறவினர்களுடன் நேற்று மீன்வளத் துறை உதவி இயக்குனர் யோகேஷ் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். கடல் சீற்றம் குறைந்ததும், மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். புயல் உருவாகிவிட்டால் அவர்களின் நிலை கவலைக்கிடமாகிவிடும். எனவே, விரைந்து மீட்க வேண்டும் என, கேட்டுக்கொண்டனர்.இதுகுறித்து கடலுார் மாவட்ட நிர்வாகம் மூலம் இந்திய கடலோர காவல்படைக்கு தெரிவிக்கப்பட்டது. படகு மூலம் மீட்பது சிரமம் என்பதால், ஹெலிகாப்டரை பயன்படுத்தி மீனவர்களை மீட்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் சென்னையிலிருந்து நேற்று மாலை 5:00 மணியளவில் சித்திரைப்பேட்டைக்கு வந்தது.கப்பல் இறங்குதளத்தில் இருந்த 6 மீனவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேர் என பத்து பேரையும் ஹெலிகாப்டர் மூலமாக மீட்டு அருகிலிருந்த விளையாட்டு மைதானத்தில் பத்திரமாக தரையிறக்கினர்.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மீட்கப்பட்ட மீனவர்களை சந்தித்து பேசினார். மீனவர்கள் மீட்கப்பட்டதையறிந்த அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை