அடிக்கடி விபத்து எதிரொலி வாகன ஓட்டிகள் அச்சம்
நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பத்தில் சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்தால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் பணிக்கன்குப்பம் குறுகிய பகுதியாகும். இந்த சாலையில் பணிக்கன்குப்பம் ஊராட்சி எல்லையும், பண்ருட்டி நகராட்சி எல்லையும் இணையும் இடத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது.இதன் அருகே வியாபாரிகள் குடோன் அமைத்து பலாப்பழம் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், அருகில் டாஸ்மாக் கடையும் உள்ளதால் இந்த சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக உள்ளது. சாலையில் ஆக்கிரமிப்பு உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி விபத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.