12 இடங்களில் விநாயகர் சிலைகள்... விஜர்சனம்; மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1373 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளில் நேற்று 130 சிலைகள் 12 இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விஜர்சனம் செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் கடலுாரில் 111 இடங்களிலும், சிதம்பரத்தில் 167, நெய்வேலியில் 223, சேத்தியாதோப்பில் 197, விருத்தாசலத்தில் 168, பண்ருட்டியில் 348, திட்டக்குடியில் 159 இடங்கள் என மாவட்டத்தில் மொத்தம் 1,373 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு கடந்த 2 நாட்களாக சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜை செய்து பக்தர்கள் வழிபட்டனர். மூன்றாவது நாளான நேற்று சிலைகளை அருகில் உள்ள நீர் நிலைகளில் விஜர்சனம் செய்தனர். அதன்படி, மாவட்டத்தில் நல்லவாடு, பச்சையாங்குப்பம், பரவனாறு, வல்லம்படுகை, கொள்ளிடம், புதுப்பேட்டை, சின்னுார், சாமியார்பேட்டை, பெரியகுப்பம், நெய்வேலி, தாண்டவன்குப்பம் ஏரி, பெருமாள் கோவில் குளம், சேத்தியாத்தோப்பு குமாரஒடை வாய்க்கால், காட்டுமன்னார்கோவில்,. வடவாறு, வீரநல்லுார், சிறுபாக்கம், மா.குடிகாடு ஏரி ஆகிய 12 இடங்களில் சிலைகள் விஜர்சனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தால் ஒதுக்கி அறிவிப்பு செய்யப்பட்டது. கடலுார் தேவனாம்பட்டினத்தில் உள்ள கடலில் நேற்று காலை முதல் பல்வேறு ஊர் மற்றும் கிராம பகுதிகளில் இருந்து விநாகர் சிலைகள் வேன், டிராக்டர், லாரி என பல்வேறு வாகனங்களில் மேள தாளங்களுடன் எடுத்துச் சென்றனர். போலீசார், ஊர்க்காவல் படை, உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் 20க்கும் மேற்பட்டோர் விநாயகர் சிலைகளை விஜர்சனம் பணியில் ஈடுபட்டனர். எஸ்பி., ஜெயக்குமார் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விநாயகர் சிலைகள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும். சிலை நிறுவப்பட்ட இடத்தில் இருந்து கரைக்கும் இடம் வரை சிலை நிறுவியர்கள் சிலைக்கு பொறுப்பு ஆவார்கள். சிலைகள் நிறுவப்பட்டுள்ள வழிபாட்டுதளம் மற்றும் சிலை கரைக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. மத வெறியைத் துாண்டும் வகையிலும் பிற மதத்தினரின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் முழக்கங்களை எழுப்பக் கூடாது என போலீசார் கட்டுப்பாடு விதித்திருந்தனர். ஊர்வலத்தையொட்டி அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க அந்தந்த பகுதிகளிலும், ஊர்வலம் செல்லும் சாலைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.