பெண்ணாடம் கோவிலில் அம்மன் சிலை கண்டெடுப்பு
பெண்ணாடம்: பெண்ணாடம் கோவிலில் பள்ளம் தோண்டும்போது கிடைத்த அம்மன் சிலையை மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது.நேற்று காலை 11:00 மணியளவில் நந்தவனம் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டியபோது, ஐந்தரை அடி உயரமுள்ள சேதமடைந்த அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. சிலையை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்துச் சென்றனர்.கோவில் செயல் அலுவலர் மகாதேவி கூறுகையில், 'இக்கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இல்லாத காலங்களில் சேதமடைந்த சிலைகளை நந்தவனம் பகுதியில் பள்ளம் தோண்டி மூடி இருக்கலாம். தற்போது, குழாய் அமைக்க பள்ளம் தோண்டும் போது ஐந்தரை அடி உயரமுள்ள அம்மன் சிலை கிடைத்துள்ளது. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க உள்ளோம்' என்றார்.