உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாமியார்பேட்டை கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற ரூ.4 கோடி அரசு ஒதுக்கீடு

சாமியார்பேட்டை கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற ரூ.4 கோடி அரசு ஒதுக்கீடு

கடலுார்; சாமியார்பேட்டை கடற்கரை கிராமத்திற்கு நீலக்கொடி சான்றிதழ் பெற தமிழக அரசு 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. சுற்றுச்சூழலை பராமரிக்கும் வகையில் அழகிய கடற்கரை ஆய்வு செய்து டென்மார்க்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளைநிறுவனம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மேலாண்மை, சுத்தமான மணல், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள்,குளிக்க தகுந்த சுகாதாரமான நீர், பாதுகாப்பு உள்ளிட்ட 33 அம்சங்களை மையமாக வைத்து நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ் பெறப்பட்டிருக்கும் கடற்கரை பாதுகாப்பான சுகாதாரமான கடற்கரை என சொல்லும் வண்ணம் இருக்க வேண்டும்.இந்த நீலக்கொடி அங்கீகாரம் பெறும் கடற்கரைக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என்பதால்,பெரும்பான்மையான நாடுகள் நீலக்கொடி சான்றிதழை பெற முயற்சி செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஏற்கனவே கோவளம் கடற்கரை நீலக்கொடி சான்றிதழ் பெற்றிருக்கும் நிலையில், மேலும் 6 கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் நடப்பாண்டிற்கான பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், திருவான்மியூர், பாலவாக்கம், சென்னையில் உள்ள உத்தண்டி, துாத்துக்குடியில் குலசேகரப்பட்டினம் கடற்கரை, விழுப்புரத்தில் உள்ள கீழ்புதுப்பட்டு கடற்கரை, கடலுார் மாவட்டத்தில் சாமியார் பேட்டை கடற்கரை ஆகிய கடற்கரைகளுக்கு தலா 4 கோடி ரூபாய் என 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க உள்ளதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. கடலுார் அடுத்த சாமியார்பேட்டை கடற்கரை கிராமம், சுற்றியுள்ள கடற்கரை கிராமங்களில் மிகப்பெரியது. இங்குள்ள பெரும்பாலான மக்கள் மீன் பிடித்தலையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இந்த கிராமம் தென்னை மரங்களால் சூழப்பட்டுள்ளது, கிராமத்தையொட்டி, நீரோடைகள் உள்ளன. உலகளவில் இதுவரை 4,154 கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ