மாணவர்கள் விளையாட்டு திறனை மேம்படுத்த அரசு பள்ளி மைதானங்கள் சீரமைக்கவேண்டும்
விருத்தாசலம்; அரசு பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களை சீரமைத்து மாவட்ட, மாநில போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலுார், விருத்தாசலம் ஆகிய இரண்டு கல்வி மாவட்டங்களில் துவக்கப் பள்ளிகள், நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலை என 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கியதும் வகுப்பு வாரியாக பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, வகுப்புகள் துவங்கியுள்ளன.அனைத்து பள்ளிகளிலும் தினசரி உடற்கல்வி ஆசிரிர்கள் மூலம் ஒரு மணி நேரம் உடற்கல்வி வகுப்புகள் நடப்பது வழக்கம். அதில் தடகளம், கைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகளும், ஒழுக்க நன்னெறியும் கற்பிக்கப்படுகிறது.ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் பயன்படுத்தும் நிலையில் இல்லை. மைதானம் முழுவதும் செடி கொடிகள் படர்ந்தும், முட்கள் நிறைந்தும் காணப்படுவதால் மாணவர்கள் ஓடியாடி விளையாட முடியாமல் சிரமமடைகின்றனர். இதனால் முழுமையான பயிற்சி கிடைக்கப்பெறாத அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டிகளில் சாதிக்க முடியாமல் திணறுகின்றனர்.எனவே, அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள் உதவியுடன் விளையாட்டு மைதானங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்க வேண்டும். புதர்களை அகற்றி, மாணவர்களுக்கு முழுமையான உடற்கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தினசரி பயிற்சி பெறுவதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களும் மாவட்ட மற்றும் மாநில போட்டிகளில் சாதிக்க முடியும்.தனியார் பள்ளிகளில் பெற்றோரை கவரும் வகையில் பலவித விளையாட்டு பயிற்சிகளுடன் குதிரை ஏற்றம், நீச்சல், வில் அம்பு போன்ற பயிற்சிகள் கற்பிக்கப்படுகிறது. இருப்பினும் அரசுப் பள்ளிகளில் தடகளம், கால்பந்து, கைப்பந்து போன்ற பயிற்சிகளை முறையாக பெற மைதானம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்த பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.