விருத்தாசலம் : மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கவும், பெற்றோர் இடையே ஒருங்கிணைப்பு மேம்படவும் அரசுப் பள்ளிகளில் வாட்ஸ்ஆப் குழுக்களை மீண்டும் செயல்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் கடலுார், விருத்தாசலம் என இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இங்கு அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் துவக்கப் பள்ளிகள் என 2,207 பள்ளிகள் உள்ளன. சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், லேப் டெக்னீஷியன் என, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.பள்ளி கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் நலன் கருதி சீருடை, புத்தகங்கள், எழுது பொருட்கள், சைக்கிள், பஸ் பாஸ் ஆகிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தரப்படுகிறது. ஆனால், தனியார் பள்ளிகளை போல மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், அரசுப் பள்ளிகளில் இல்லை. மாநில அளவில் கடலுார் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் பின்தங்கியே உள்ளது.தனியாருக்கு நிகராக அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தி, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த தமிழக அரசு முயற்சி செய்தாலும், தேர்ச்சி சதவீதம் போதிய அளவில் இல்லை. தனியார் பள்ளியில் மாணவர்களின் தலைமுடி, சீருடை என எல்லாவற்றிலும் கண்காணிப்பு இருக்கும். ஆனால், அரசு பள்ளி மாணவர்களிடம் நெருக்கடி தர முடிவதில்லை.இந்நிலையில், கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்களின் கற்றல் திறன் பாதித்தது. இதை தவிர்க்கும் வகையில், தனியார் பள்ளிகளைப் போல வாட்ஸ் ஆப் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர்கள் முயற்சியால் மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண்களை இணைத்து, ஆன்லைன் முறையில் பாடங்கள் எடுக்கப்பட்டது.மாதக்கணக்கில் புத்தகத்தை தொடாமல், டிவி.,க்களில் பொழுதுபோக்கிய மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக ஆன்லைன் படிப்பு உதவியது. அதுபோல், பள்ளி கல்வித்துறை சார்பில் தனியாக சேனல் துவங்கி, மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இது பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அதன்பின், கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பள்ளிகள் வழக்கம்போல துவங்கியதால், வாட்ஸ்ஆப் குழுக்கள் முடங்கியது. இதனால் ஆசிரியர்கள், பெற்றோர் இடையே தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஒரு சில பெற்றோர் மட்டும், தங்களது பிள்ளைகளின் அன்றாட செயல்பாடுகளை, அந்தந்த வகுப்பு ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஏழ்மையான சூழலில் உள்ள மாணவர்களே படிப்பதால், அவர்களின் கல்வி நிலை, கற்றல் திறன் குறித்து பெற்றோருக்கு தெரிவதில்லை. இதனால் தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்கள் இடைநிற்கும் அவலம் ஏற்படுகிறது. தனியார் பள்ளிகளில் தனியாக ஒரு மொபைல் ஆப் துவங்கி வீட்டுப் பாடங்கள், சுற்றறிக்கைகள், தேர்வு மதிப்பெண்கள், கட்டண விபரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால் பெற்றோரும் குறிப்பிட்ட ஆப் மூலம் மாணவர்களின் விபரம் அனைத்தையும் வீட்டில் இருந்தே தெரிந்து கொள்கின்றனர். இதனால் மாணவர்கள் எந்த பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுக்கிறார் என்பதை கண்டறிந்து, அதில் தோல்வி பெறுவதை தடுக்கின்றனர். ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்ற எந்தவித வசதியும் இல்லை. எனவே, கொரோனா காலத்தில் செயல்படுத்தியதுபோல வாட்ஸ்ஆப் குழுக்கள் துவங்கி, அதில் மாணவர்களுக்கு பாடங்கள், தேர்வுகள், அவர்களின் செயல்பாடு குறித்த விபரங்களை பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும்.குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை ஊக்கப்படுத்தி, அதிக மதிப்பெண்கள் பெற வழிவகை செய்ய வேண்டும். ஒரு சில ஆசிரியர்கள் மட்டும் வாட்ஸ்ஆப் குழுக்களை இன்றளவும் பயன்பாட்டில் வைத்துள்ளனர். எனவே, கொரோனா காலத்தைப் போல வாட்ஸ்ஆப் குழுக்களை அனைத்து அரசு பள்ளிகளிலும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.