உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தே.மு.தி.க., இணைந்தால் காங்.,க்கு கல்தா விருத்தாசலம் தொகுதிக்கு புது தலைவலி

தே.மு.தி.க., இணைந்தால் காங்.,க்கு கல்தா விருத்தாசலம் தொகுதிக்கு புது தலைவலி

தே .மு.தி.க., கட்சியை கடந்த 2005ம் ஆண்டு துவங்கிய விஜயகாந்த், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டார். அதில், விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் அவர் மட்டுமே வெற்றி பெற்றார். மற்ற தொகுதிகளில் கணிசமான ஓட்டுகளை பெற்றார். அதற்கடுத்த தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் போட்டியிட்ட முத்துக்குமாரும் விருத்தாசலத்தில் வெற்றி பெற்றார். இருமுறை விருத்தாசலம் தொகுதியை கைப்பற்றிய தே.மு.தி.க., கூட்டணி மாற்றம், சமூக நலக்கூட்டணி, விஜயகாந்த் மறைவு போன்ற காரணங்களால் பலவீனமானது. இதனால் விஜயகாந்துடன் எம்.எல்.ஏ.,வான பலரும் மாற்றுக் கட்சிகளுக்கு தாவினர். கடந்த சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க.,வுடன் களமிறங்கிய பிரேமலதா, விருத்தாசலம் தொகுதியில் டிபாசிட் இழந்தார். லோக்சபா தேர்தலிலும் சோபிக்க முடியவில்லை. இப்படி, தொடர் தோல்விகளால் துவண்ட அக்கட்சித் தொண்டர்களுக்கு, வரும் சட்டசபை தேர்தல் மிகப்பெரும் சவாலாக இருக்கும். இதனால் தி.மு.க., அல்லது அ.தி.மு.க.,வுடன் கூட்டணியில் களமிறங்கி, சட்டசபையிலும் அதற்கடுத்த உள்ளாட்சித் தேர்தலிலும் கால்பதிக்க அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இதற்காக மறைமுகமாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. அவ்வாறு கூட்டணி அமைந்தால், விஜயகாந்த் வெற்றி பெற்ற விருத்தாசலம், ரிஷிவந்தியம் தொகுதிகளை அக்கட்சி கட்டாயம் கேட்டுப் பெறும். இதனால், தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்ற சிட்டிங் காங்., - எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் மீண்டும், இதே தொகுதியில் போட்டியிடலாம் என்கிற எண்ணத்திற்கு முட்டுக்கட்டை விழும் என அக்கட்சியினர் நினைக்கின்றனர். இதனால், தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணையக் கூடாது என்ற எண்ணத்தில் உள்ளனர். இவர்கள் நிலை இப்படி இருக்க, ஏற்கனவே சொந்தக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிடாத வகையில் கூட்டணி கட்சிகள் அபகரித்து வரும் நிலையில், விருத்தாசலம் தொகுதிக்கு புது தலைவலி ஏற்பட்டுள்ளதாக தி.மு.க.,வினர் புலம்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ