மானிய விலையில் இடுபொருள் வேளாண் உதவி இயக்குநர் தகவல்
கடலுார் : குமராட்சி வட்டார விவசாயிகள் நடப்பு பட்டத்திற்கான வேளாண்மை இடுபொருட்களை மானிய விலையில் வாங்கி பயனடையுமாறு, வேளாண்மை உதவி இயக்குநர் தமிழ்வேல் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது செய்திக்குறிப்பு: குமராட்சி வட்டார விவசாயிகள், தற்போது சம்பா சாகுபடிக்கான ஆயத்த பணிக்கு நிலத்தை உழுது பதப்படுத்தி வருகின்றனர். விவசாயிகள் தங்கள் நிலத்தின் தன்மைக்கு ஏற்ற நடப்பு பட்டத்திற்கான சன்ன நெல் ரகங்களான பி.பி.டி., - 5204; டி.கே. எம்., - 13; ஏ.டி.டி., - 54 ஆகிய தரமான விதைகள் குமராட்சி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்திலும், அம்மாபேட்டை துணை வேளாண்மை விரிவாக்க மையத்திலும் இருப்பு உள்ளது. மேலும், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்க திட்டத்தில் 1 கிலோ நெல் விதைக்கு ரூ. 20 மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் நெல் சாகுபடிக்கு தேவையான உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்களும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், வரப்பு உளுந்து பயிர் செய்ய 50 சதவீத மானியத்தில் தரமான வம்பன் - 8; வம்பன் - 10; ரக உளுந்து விதைகளும் வினியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.