மின்சாரம் வழங்க காலதாமதம் ஜமியத் நகர் மக்கள் போராட்டம்
கோட்டக்குப்பம் : கோட்டக்குப்பத்தில் மின்சாரம் வழங்க காலதாமதம் ஏற்பட்டதால், ஆத்திமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.'பெஞ்சல்' புயலையொட்டி, கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. குறிப்பாக ஜமியத் நகரில் திடீரென வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். அவர்களை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.அப்பகுதியில் மழைநீர் வடிந்த நிலையில், நேற்று காலை வரை மின்சாரம் வழங்கப்படவில்லை.இதனை கண்டித்து, ஜமியத் நகர் பகுதி மக்கள் காலை 10:00 மணிக்கு கோட்டக்குப்பம் ரவுண்டானா எதிரில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த மக்கள், மறியலில் ஈடுபட முயன்றனர்.அதற்குள் கோட்டக்குப்பம் போலீசார் மற்றும் மின்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஒவ்வொரு பகுதியாக மின்சாரம் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், தங்கள் பகுதிக்கும் விரைந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று பொது மக்கள் கலைந்து சென்றனர்.