கடலுார்: மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்.,படிவங்கள் வழங்குவதில் நடக்கும் குளறுபடிகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மா.கம்யூ.,கோரிக்கை விடுத்துள்ளது. மா.கம்யூ., கடலுார் மாவட்ட செயற்குழு கூட்டம், கடலுார் சூரப்பநாயக்கன்சாவடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட செயலாளர் மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், கருப்பையன், சுப்பராயன், ராமச்சந்திரன், திருவரசு, தேன்மொழி, ராஜேஷ்கண்ணன், அமர்நாத், பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில், 80 சதவீத படிவங்கள், வாக்காளர்களிடம் வழங்கப்பட்டதாக கடலுார் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் இன்னும் பல கிராமங்களுக்கு, பல வீடுகளுக்கு படிவம் வழங்கப்படவில்லை. பி.எல்.ஓ.,அதிகாரிகள் முழுமையாக பணியில் ஈடுபடாமல், மாலை மட்டுமே இந்தப்பணியை செய்கின்றனர். விளக்கம் கேட்கும் மக்களுக்கு முறையாக விளக்கம் அளிக்காமல், படிவத்தில் பெயர் எழுதி கையெழுத்து மட்டும் போட்டுக்கொடு என சொல்லும் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எஸ்.ஐ.ஆர்., பணியில் நடக்கும் குளறுபடிகளை சரிசெய்திட வேண்டும். மேலும், அரசியல் கட்சிகளுக்கு 2002- - 2005 வாக்காளர் பட்டியல் வழங்க வேண்டும். எஸ்.ஐ.ஆர்., பணிகள் முழுமை அடையாத நிலையில் தேர்தல் ஆணையம் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.