ரவுடி என்கவுன்டர் மாஜிஸ்திரேட் விசாரணை
கடலுார்: கடலுார் அருகே ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தை மாஜிஸ்திரேட் பார்வையிட்டார். கடலுார் மாவட்டத்தில் விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழி சாலையில் கடந்த 2ம் தேதி அதிகாலை 6 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்து, லாரி டிரைவர் உட்பட 3 பேரை கத்தியால் வெட்டி, பணம், மொபைல் போனை கொள்ளையடித்து சென்றது. எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின்பிடி, தனிப்படை போலீசார், கடலுாரில் பதுங்கி இருந்த கொள்ளைக் கும்பலை பிடித்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின்படி, முக்கிய குற்றவாளி புதுச்சேரி திலாசுபேட்டையை சேர்ந்த விஜய் 19; (எ) மொட்டை விஜய் எம்.புதுார் முந்திரி தோப்பில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.போலீசார் பிடிக்க சென்ற போது, அவர் வைத்திருந்த கத்தியால் போலீசார் கணபதி, கோபி ஆகியோரை வெட்டினார். அப்போது அருகில் இருந்த இன்ஸ்பெக்டர் சந்திரன் தற்காப்பிற்காக விஜயை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் விஜய் சம்பவ இடத்திலேயே பலியானார்.என்கவுன்டர் சம்பவம் நடந்த எம்.புதுாரில் நெய்வேலி மாஜிஸ்திரேட் பிரவீன்குமார் நேற்று பார்வையிட்டார். இவருக்கு போலீசார் துப்பாக்கி சூடு குறித்து விளக்கினர்.