சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.5.74 கோடி மோசடி செய்தவர் கைது
நெய்வேலி: சீட்டு நிறுவனம் நடத்தி, 5.74 கோடி ரூபாய் மோசடி செய்த ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், நெய்வேலி, இந்திரா நகரை சேர்ந்தவர் தமிழ்வேந்தன், 61; ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியர். இவர், புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சீட்டு நிறுவனத்தின் கடலுார் மாவட்ட தலைவராக பணிபுரிந்தார். இவர், பொதுமக்கள் பலரிடம், குறிப்பிட்ட தொகை சீட்டு கட்டினால் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி, மோசடி செய்ததாக நெய்வேலி டவுன்ஷிப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் தமிழ்வேந்தனை பிடித்து, நேற்று விசாரணை நடத்தினர். அதில், 2020 முதல் 2023 வரை, வடலுார், நெய்வேலி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 558 பேரிடம், 5 கோடியே 74 லட்சம் ரூபாயை திருப்பி தராமல் மோசடி செய்தது தெரிந்தது. தமிழ்வேந்தனை போலீசார் கைது செய்து, மேலும் சிலரை தேடி வருகின்றனர்.