நண்பரின் மனைவியை மிரட்டியவர் கைது
கடலுார்: கடலுாரில் சிறையில் உள்ள நண்பனை ஜாமினில் எடுக்காத அவரது மனைவியிடம் தகராறு செய்து மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.குறிஞ்சிப்பாடி அடுத்த பாச்சார பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் ஹரிகிருஷ்ணன்,24. இவரும், கடலுார் ரெட்கிராஸ் தெருவைச் சேர்ந்த ஏழுமலை என்பவரும் கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு குற்றவழக்கில் திருப்பாதிரிப்புலியூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஹரிகிருஷ்ணனுக்கு ஜாமின் கிடைத்து வெளியே வந்தார். ஆனால் ஏழுமலைக்கு ஜாமின் கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்த ஹரிகிருஷ்ணன், ஜன.11ம் தேதி, ஏழுமலை் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரது மனைவி திவ்யாவிடம் ஏன் ஜாமின் போடவில்லை எனக்கேட்டு தகராறு செய்தார். வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, திவ்யாவின் கன்னத்தில் அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து ஹரிகிருஷ்ணனைக் கைது செய்தனர்.