ரூ.9 கோடியில் மருதம் பூங்கா பணிகள் துவக்கம்
கடலுார்: கடலுாரில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருதம் பூங்கா அமைக்கும் பணியினை அமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். கடலுார் கலெக்டர் அலுவலகம் அருகே 14 ஏக்கர் பரப்பளவில் மருதம் பூங்கா அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கான துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அருண் வரவேற்றார். தோட்டக்கலைத்துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் முன்னிலை வகித்து பேசினார். சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ., வட்டாரத்தில் வரக்கூடிய மரங்களை இந்த பூங்காவில் நட வேண்டும் என கோரிக்கை வைத்தார். அமைச்சர் பன்னீர்செல்வம் ரூ. 9 கோடி மதிப்பில் மருதம் பூங்கா அமைக்கும் பணியினை தொடங்கி வைத்து பேசியதாவது: கடலுார், செம்மண்டலம் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் வாயிலாக 14.16 ஏக்கர் பரப்பளவில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டிலும், தாழ்வாக உள்ள இப்பகுதியில் கூடுதல் மண்ணை கொண்டு மேம்படுத்திட நெய்வேலி நிறுவனம் சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம் 2.50 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இப்பூங்கா எழில்மிகு நுழைவாயிலுடன் பல்வேறு வகையான கண்களை கவரும் வண்ண மலர் தோட்டங்கள், அழகிய செடி சிற்ப தோட்டங்களை உள்ளடக்கிய பாறை தோட்டம், இயற்கை பிண்ணனியுடன் கூடிய இசை தோட்டம் மற்றும் பல்வேறு சிற்பங்களுடன் கூடிய பாதுகாப்பான சிறுவர் விளையாடும் அம்சங்களுடன் அமையவுள்ளது. மேலும் இப்பூங்காவில் இயற்கை குளிர்ச்சியுடன் இளைப்பாற நடந்திட நடைபாதை, நீர்வீழ்ச்சியுடன் கூடிய குளங்கள் மற்றும் இசை நீருற்று ஆகியன பார்வையாளர்களை கவரும் வண்ணம் அமையவுள்ளது. பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் கண்டுகளிக்கும் பொருட்டு பல்வேறு வகையான பறவைகள் கூடம் அமையவுள்ளது. மேலும் சுற்றுச்சூழலினை காத்தல், சூழலியல் குறித்த கற்றல், மக்களை இயற்கையோடு இணைத்தல் ஆகியவற்றினை நோக்கமாக கொண்டு அமைக்கப்படவுள்ளது. மருதம் பூங்கா சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்காக உருவாக்கப்படவுள்ளது. தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையினை அதிகரிக்கும் வகையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் வளர்ச்சிக்காக சாலைகள் விரிவுப்படுத்தப்படுத்தும் பணிகளும், மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. கடலுார் அருகிலுள்ள கொடுக்கன்பாளையத்தில் தோலில்லா காலணி தொழிற்சாலை வெகுவிரைவில் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள 10 ஆயிரம் பேருக்கு, வேலைவாய்ப்பு கிடைக்கப்படவுள்ளது.இவ்வாறு அவர் பேசினார். தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் சாந்தா செலின் மேரி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் துணைமேயர் தாமரைச்செல்வன், இணை இயக்குநர் லெட்சுமிகாந்தன் உள்ளிட்டோர், கலந்து கொண்டனர்.