மக்களுக்காக அ.தி.மு.க., போராடவில்லை அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி புவனகிரி தொகுதி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராயர், சபாநாயகம், மனோகரன், திருமாவளவன், திருமூர்த்தி, சுந்தரபாண்டி, செந்தில்குமார், விவசாய பிரிவு பாலு, நகர செயலாளர் பழனிமனோகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் தங்ககுலோத்துங்கன், பாலு முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மதியழகன் வரவேற்றார். எழுத்தாளர் மதிமாறன், பேச்சாளர் கோமதி, மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல்மாலிக், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மருதுார் ராமலிங்கம், சரவணன் விளக்க உரையாற்றினர். அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து மக்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 4 லட்சத்து 50 ஆயிரத்தி 133 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியானது மக்களுக்காக போராடவில்லை. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நிதி தராத மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்துகிறோம். 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சதீஷ் நன்றி கூறினார்.