உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விளையாட்டு பயிற்சி மீது கூடுதல் கவனம் ... தேவை: அரசு பள்ளிகளில் மாணவர்கள் எதிர்பார்ப்பு

விளையாட்டு பயிற்சி மீது கூடுதல் கவனம் ... தேவை: அரசு பள்ளிகளில் மாணவர்கள் எதிர்பார்ப்பு

விருத்தாசலம்: மாவட்ட அரசு பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளில் கவனம் செலுத்தி மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு மாணவ, மாணவிகளை தயார்படுத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலுார், விருத்தாசலம் ஆகிய இரண்டு கல்வி மாவட்டங்களில் துவக்கப் பள்ளிகள், நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலை என 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளிலும் தினசரி உடற்கல்வி ஆசிரிர்கள் மூலம் ஒரு மணி நேரம் உடற்கல்வி வகுப்புகள் நடப்பது வழக்கம். அதில், தடகளம், கைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகளும், ஒழுக்க நன்னெறியும் கற்பிக்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் பயன்படுத்தும் நிலையில் இல்லை. செடி, கொடிகள் படர்ந்தும், முட்கள் நிறைந்தும் காணப்படுவதால் மாணவர்கள் ஓடியாடி விளையாட முடியாத நிலை உள்ளது.இதனால் முழுமையான பயிற்சி கிடைக்கப் பெறாமல் போட்டிகளில் சாதிக்க முடியாமல் மாணவர்கள் திணறுகின்றனர். ஆனால், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி, விளையாட்டு பயிற்சிகளுடன் குதிரை ஏற்றம், நீச்சல், வில் அம்பு போன்ற பயிற்சிகளும் கற்பிக்கப்படுகிறது. எனவே, அரசு பள்ளிகளில் பாழான விளையாட்டு மைதானங்களை சீரமைக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் க டந்த ஜூன் மாதம் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, ஒரு சில பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு ஆகியன இணைந்து தலைமை ஆசிரியர்கள் முயற்சியுடன் மைதானங்களை சீரமைக்கும் பணி நடந்தது. ஆனால், முழுமையாக சீரமைப்பு பணிகள் முடியாமல், மாணவர்கள் பயன்பெற முடியவில்லை. உடற்கல்வி வகுப்புகளுக்கான நேரத்தில் மாணவர்களை விளையாட அனுமதிக்க வேண்டும். அந்த வகுப்புகளை புறக்கணித்து, மாற்று வகுப்புகளுக்கு பாடம் எடுக்க கூடாது என்று துணை முதல்வர் உதயநிதி உத்தரவிட்டிருந்தார். இது உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும், சில பள்ளிகளில் செயல்பாட்டிற்கு வரவில்லை. விளையாட்டு பயிற்சிக்கு சென்றால் கல்வியில் கவனம் செலுத்த மாட்டார்கள் என தேர்ச்சி சதவீதத்தை கருத்தில் கொண்டு, அவர்களை தலைமை ஆசிரியர்கள் அனுப்ப மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. கடந்த ஜூன் மாதத்தில், 2025 - 26ம் கல்வியாண்டிற்கு தடகளப் போட்டிகள், கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, இறகுபந்து, மேஜைபந்து போட்டிகளில் தனித்திறனுடன் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளை மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்கு அழைத்துச் செல்லும் வகையில் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, ஜூன் மாதத்தில், அனைத்து வகை விளையாட்டுப் போட்டிகளுக்கும் வீரர்களை கண்டறியும் திட்டம், உலக திறனாய்வு தேர்வுப் போட்டிகள் துவங்க வேண்டும். ஆனால், மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்ததால், விளையாட்டுப் போட்டிகள் துவங்கப்படாமல், ஜூலை மாதத்தில் துவங்கியது. 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 2026 ஜனவரி வரை தொடர்ச்சியாக குறுவட்ட அளவிலான போட்டிகள், வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கான உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டன. இருப்பினும் ஒரு சில பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகளில் மாணவர்களை விளையாட்டு பயிற்சிக்கு தலைமை ஆசிரியர்கள், விளையாட்டு ஆசிரியர்கள் அனுப்புவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு சில பெண்கள் பள்ளிகளில், மாணவிகளுக்கு விளையாட்டுகள் குறித்த புரிதல் இல்லாத நிலையே தொடர்கிறது. எனவே, மாவட்ட அரசு பள்ளிகளில் இருந்து வீரர், வீராங்கனைகளை உருவாக்க விளையாட்டு போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். சிறப்பு சலுகைகள் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் சாதிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, உயர்கல்வியில் சிறப்பு சலுகைகள் கிடைக்கும். மதிப்பெண்ணுடன் கூடுதலாக கிடைக்கும் புள்ளிகள், அவர்களுக்கு உறு துணையாக அமைகிறது. ராணுவம், போலீஸ் உட்பட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புக்கும் பக்கபலமாகிறது. எனவே, அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்க்கை தரம் உயர பள்ளியளவில் விளையாட்டு பயிற்சிகளை மேம்படுத்த கல்வித்துறை கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை