உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ. 54 கோடியில் குளங்களை இணைக்கும் திட்டம்: சிதம்பரத்தில் செயல்படுத்த நகராட்சி நடவடிக்கை

ரூ. 54 கோடியில் குளங்களை இணைக்கும் திட்டம்: சிதம்பரத்தில் செயல்படுத்த நகராட்சி நடவடிக்கை

சிதம்பரம்; தமிழகத்தில் முன்னோடி திட்டமாக, ரூ. 54 கோடியில் சிதம்பரத்தில் உள்ள அனைத்து குளங்களையும் இணைக்கும் திட்டம் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.தமிழகம் முழுவதும், நீர்நிலைகளை பாதுகாக்க ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதன் காரணமாக ஏரி, ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடலுார் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த நீர்நிலை பாதுகாப்பு சங்கத் தலைவர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் தொடுத்த வழக்கு காரணமாக, சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த குளங்களை மீட்டு, சீரமைக்கப்பட்டு வருகிறது.நகராட்சி சேர்மன் செந்தில்குமார் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்ததையடுத்து, நகர்புற அமைச்சர் நேரு, சிதம்பரம் நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ரூ. 240 கோடி நிதி ஒதுக்கினார். அதில், சுமார் 18 கோடியில், நகரில் உள்ள பல்வேறு குளங்கள் சீரமைக்கப்பட்டன. தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது.தற்போதைய நிலையில் அண்ணா குளம், ஞானபிரகாசம் குளம், குமரன் குளம், பாலமான் குளம் உள்ளிட்ட 5 குளங்கள் துார் வாரி புனரமைக்கப் பட்டுள்ளன. தச்சன் குளம், ஆயி குளம், தில்லையம்மன் கோவில் குளம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. ஓமக்குளம், நாகசேரி குளங்களில் பணிகள் துவங்க உள்ளது.சிதம்பரத்தில் குளங்களை சீரமைத்து, கரையோரம் நடைபாதை அமைக்கப்பட்டதால், அதில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர், காலை மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். புனரமைக்கப்பட்ட குளங்கள் நகருக்கும் அழகு சேர்க்கின்றன.இந்நிலையில், தமிழகத்தில் முன்னோடி திட்டமாக, சிதம்பரத்தில் அனைத்து குளங்களையும், ஒன்றுடன் ஒன்று இணைக்க வேண்டும் என வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறினார். அதையடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்த நகராட்சி சார்பில் ரூ. 54 கோடியில் திட்டம் தயாரித்து நிதித்துறை பரிந்துரைக்கு அனுப்பப் பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் விரைவில் பணிகள் துவங்கப்படும் என, நகராட்சி சேர்மன் செந்தில்குமார் தெரிவித்தார்.இத்திட்டத்தின்படி, நகரில் உள்ள அனைத்து குளங்களும் ஆக்கிரமிப்பின் பிடியிலிருந்து மீட்கப்படும். தொடர்ந்து, குளங்களுக்கான நீர்வழி பாதைகள் கண்டறியப்பட்டு புனரமைக்கப்படும். இந்த நீர்வழி பாதைகள் சங்கிலி தொடர் போல குளங்களுடன் இணைக்கப்படும். இதன் மூலம், நீர்வரத்து உள்ள காலத்தில் பரவலாக அனைத்து குளங்களுக்கும் நீர் செல்லும் வாய்ப்பு உருவாகி, நிலத்தடி நீர் மட்டம் உயரும். இத்திட்டம் குறித்து செந்தில்குமார் கூறியதாவது:ரூ. 54 கோடியில், சிதம்பரத்தில் உள்ள அனைத்து குளங்களும் இணைக்கப்பட உள்ளன. இரண்டாம் கட்டமாக, இயற்கை முறையில் துாய்மையான தண்ணீரை குளத்தில் நிரப்பப்படும்.ஈஸ்வரன் குளம், ஆணைமேட்டு குளம், ஓமக்குளம், நாகசேரி குளம், புளிச்சமேட்டுக்குளம், சின்னஅண்ணா குளம், இளமையாக்கினார் குளம், வீரனார் குளம், சிப்பிக்குட்டை ஆகியவை புனரமைக்கப்படும். மழைநீர் வடிகால்களை சீரமைத்து, துாய்மையான தண்ணீரை வாய்க்காலுக்கு அனுப்ப, ரூ. 125 கோடிக்கு திட்டம் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. குளங்கள் இணைப்பு திட்டம், நிறைவேற்றப்பட்டால், தமிழகத்தில் முன்னோடி திட்டமாக, இத்திட்டம் பார்க்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி