உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு

சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு

காட்டுமன்னார்கோவில் : வரும் சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என, அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராளிகள் கலியபெருமாள், ஆனைமுத்து, இளையபெருமாள் ஆகியோரின் நுாற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சீமான் பேசியதாவது: தமிழர்கள் எப்போதும், பழம்பெருமை பேசுவார்களே என திராவிடர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏனெனில் தமிழர் வரலாற்று பெருமை பேசுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். வரலாறு என்பது ஒட்டுமொத்த தமிழ் தேசியத்தின் வழித்தடம். தமிழரின் அடையாளங்களை மறைத்தால்தான் திராவிடத்தால் அரசியல் செய்ய முடியும் என்று திட்டமிட்டு செய்து வருகின்றனர். படித்தவர்கள், வெளிநாட்டினர் என அனைவரும் பறை இசை அடித்து வருகின்றனர். நமது இனத்தின் கச்சேரியாகவே கருதப்பட்டு வருகிறது. வன்கொடுமை தடுப்பு சட்டம் பற்றி முன்னாள் எம்.பி., இளையபெருமாள் பேசியுள்ளார். ஆனைமுத்து சமூகநீதி பங்கீடு பற்றி பேசியுள்ளார். வெளி மாநிலங்களுக்கு சென்று ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தேவை என்பதை வலியுறுத்தி பல தலைவர்களிடம் பேசினார். 69 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க காரணமானவர் ஆனைமுத்து. இதன் காரணமாகவே அவரை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பாராட்டினார். நெல்லில் இருந்து புரட்சி தொடர்கிறது என்பதை வலியுறுத்தி கலியபெருமாள் விவசாயிகளுக்கான போராட்டங்களை முன்னின்று நடத்தினார். தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அவரது மகன் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்கிறார். இவரது மகன் உதயநிதி துணை முதல்வராக உள்ளார். அரசியலில் விடுதலை என்பது ஓட்டுதான். வலிமைமிக்க ஓட்டுகளை ரொட்டி துண்டுகளுக்காக விற்காதே என்று கூறிய அம்பேத்கர் வழியில் மக்கள் செயல்பட வேண்டும். திராவிட அரசியலின் சூழ்ச்சியே தமிழ் தேசிய அரசியலை பிரித்தல் ஆகும். தமிழர்கள் பிரிந்து இருப்பதால் தான் திராவிடம் வலுப்பெற்று வருகிறது. கஞ்சா, புகையிலை, மது பழக்கம் ஆகியவற்றில் இருந்து மீள வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிட உள்ளோம். 2026ல் சமூக நீதி அரசியல் நிச்சயமாக இடம் பெறும். சமூக நீதி காவலர்கள் என கூறிக் கொள்ளுபவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க அஞ்சுவது ஏன். இவ்வாறு சீமான் பேசினார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் துரைமுருகன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், சர்வதேச செய்தி தொடர்பாளர் பாக்கியராஜ், இதயரூபன், தமிழ்வளவன், வெற்றிவேல், சுமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை