ஆலை கழிவு நீரால் பாதிப்பு புகார் நெல்லிக்குப்பத்தில் அதிகாரிகள் ஆய்வு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை கழிவுநீரால் பாதிப்பு ஏற்படுவதாக வந்த புகாரையடுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பல கிலோமீட்டர் தூரம் வாய்க்கால் வழியே சென்று கெடிலம் ஆற்றில் கலப்பதாகவும், கழிவுநீர் செல்லும் வழியில் நிலத்தடிநீர் பாதிப்பு, கெடிலம் ஆற்று தடுப்பணையில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் பாதிப்பு ஏற்படுவதாகவும் கலெக்டருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. அதையடுத்து, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்பேரில் கடலுார் மாநகராட்சி கமிஷனர் அனு தலைமையில், ஆர்.டி.ஓ., அபிநயா மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று, நெல்லிக்குப்பம் ஆலை கழிவுநீர் செல்லும் வாய்க்கால்களை ஆய்வு செய்தனர்.ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை பல இடங்களில் பிடித்து ஆய்வுக்கு எடுத்து சென்றனர். அதிகாரிகள் திடீர் ஆய்வால் பரபரப்பு ஏற்பட்டது.