உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் மைதானத்தில் கடைகள் கட்ட... எதிர்ப்பு; திறந்தவெளி அரங்கமாக நீடிக்க கோரிக்கை

கடலுார் மைதானத்தில் கடைகள் கட்ட... எதிர்ப்பு; திறந்தவெளி அரங்கமாக நீடிக்க கோரிக்கை

கடலுார், ஆக. 6- கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கடைகள் கட்ட மூத்த குடிமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடலுார் மாநகர மையத்தில் அமைந்துள்ளது 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட திறந்த வெளி மைதானம். சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ஆங்கிலேயர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து எதிரில் உள்ள மைதானத்தை குதிரை லாயமாக பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது இந்த மைதானத்தில் முதியவர்கள் மாலை நேரத்தில் சக நண்பர்களோடு சேர்ந்து பேசி இயற்கை காற்றுவாங்கி பொழுதை கழிப்பதற்கு ஏற்ற இடமாக உள்ளது. இந்நிலையில் தற்போது, மைதானம் முழுக்க கடைகளாக விரைவில் மாற உள்ளது. நகராட்சியாக இருந்த கடலுார் கடந்த 2021ம் ஆண்டு அக்., 22ம் தேதி மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. அதன் பின்னர் மாநகராட்சி மேயர் தேர்தல் நடந்தது. கடலுார் மாநகராட்சியில் வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவற்றில் முக்கிய பங்கு வகிப்பது கடைகள் கட்டுவதுதான். அதாவது பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள், லாரன்ஸ்ரோடு மாடியில் கடைகள் காலியாக உள்ளன. இது தவிர மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட், முதுநகர் மார்க்கெட் போன்றவை இடித்து தரைமட்டமாக்கி விட்டு புதிய கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இது போதாது என்று மைதானத்தில் பீச் ரோடு செல்லும் வழியில் கடைகள் கட்டப்பட்டுவிட்டன. மேலும் தற்போது 14.15 கோடி ரூபாயில் 77 கடைகள் கட்ட துவக்க விழா நடந்து முடிந்துள்ளது. இப்படி கட்டப்படும் கடைகளால் திறந்த வெளிக்குள் காற்று வருவது தடைபடும். மேலும், மைதானத்தின் இயற்கை அழகும் கெட்டுவிடும் என மூத்த குடிமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கடலுார் மாநகர பொது நல இயக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி கூறுகையில், 'கடலுார் மாநகரில் மைதானம் ஒரு பொக்கிஷம்போன்றது. ஆனால் காலப்போக்கில் சுருங்கி வருகிறது. ஏற்கனவே 'அம்ரித்' திட்டத்தில் பூங்காவை விரிவுபடுத்த 1.5 ஏக்கர் இடத்தை இணைத்துக் கொண்டனர். தெற்கே பாபு கலையரங்கம் உள்ள பகுதி முழுவதும் குப்பை வண்டிகள் நிறுத்தும் இடமாக மாறிவிட்டது. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கழிப்பிடத்தை மைதானத்தில் கட்டி ஆக்கிரமித்தனர். மேலும், மணிமண்டபம், அறிவுசார் மையம் என ஆங்காங்கே கட்டடங்கள் கட்டப்பட்டுவிட்டன. தற்போது எஞ்சியுள்ள பகுதியிலேயேயும் கடைகள், கன்வென்ஷன் சென்டர், நடைபாதை என கட்டப்படுகிறது. மைதானத்தை இயற்கை மாறாமல் இருக்க தேவையான முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஏற்கனவே கட்டப்பட்ட கடைகள் எல்லாம் காலியாக உள்ளன. அந்த இடத்தில் அரசு அலுவலகங்கள் கூட வைக்கலாம். எனவே மைதானத்தை மேலும் மேலும் கட்டடங்களாக மாற்றி வருவது ஏற்புடையதல்ல' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ