இடம் அளவீடு செய்ய எதிர்ப்பு : ஸ்ரீமுஷ்ணம் அருகே பரபரப்பு
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே, சர்ச்சுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீபுதுக்குப்பத்தில் புனித லுார்து அன்னை ஆலயம் உள்ளது. இங்கு, தேர்பவனி நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே கடந்த சில மாதங்களுக்கு தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், ஆலயத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் 68 சென்ட் நிலத்தை ஸ்ரீபுதுக்குப்பம் புனித லுார்து அன்னை ஆலய பங்கின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவது குறித்து இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு உள்ளது. ஸ்ரீபுதுக்குப்பத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் நிலத்தை அளவீடு செய்ய நில அளவர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் நேற்று மதியம் வந்தனர். அப்போது, அங்கிருந்த மற்றொரு தரப்பினர், எதிர்ப்பு தெரிவித்து அளவீடு பணியை நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையேற்று இருதரப்பினரும் கலைந்து சென்றனர்.