நம்ம பள்ளி, நம்ம வாத்தியார்... மெட்ரிக் பள்ளிக்கு இணையாக எருமனுார் அரசு உயர்நிலைப் பள்ளி அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஆசிரியர்கள்
மெ ட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, எருமனுார் அரசு உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தி பாடம் நடத்தி வருகின்றனர். விருத்தாசலம் அடுத்த எருமனுார் அரசு உயர்நிலைப் பள்ளி கடந்த 2010ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த பள்ளியில் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 235 மாணவர்கள், 215 மாணவிகள் என மொத்தம் 450 பேர் படித்து வருகின்றனர். மேலும், கடந்த 2018ம் ஆண்டு முதல் ஆங்கிலவழி கல்வியும் கற்பிக்கப்படுகிறது. தலைமை ஆசிரியர் எழில்ராணி உட்பட 17 ஆசிரியர்கள், 2 அலுவலக பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளி துவங்கியதில் இருந்து இதுவரை 14 முறை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி உள்ளனர். அதில், 4 முறை 100 சதவீதமும், 9 முறை 90 சதவீதத்திற்கு மேலும் தேர்ச்சியை பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். கணினி ஆய்வகம், மூன்று ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை, அறிவியல் ஆய்வகம் என மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக கிராமப்புற மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. இப்பள்ளியில் பள்ளியில் படித்த மாணவர்கள் சப் இன்ஸ்பெக்டர், இரண்டாம்நிலை காவலர், ஐ.டி., போன்ற தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். ஆண்டுதோறும் இந்த பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. மாவட்டத்திலேயே அரசு உயர்நிலை பள்ளியில் அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளி என்ற சிறப்பை பெற்றுள்ளது. மாணவர்ளுக்கு வாரத்தில் 3 நாட்கள் யோகா, உயற்பயிற்சி, கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்சிகள் கற்பிக்கப்படுகிறது. விருது பெற்ற பள்ளி மாணவர்கள் சுத்தமான குடிநீர் குடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மாணவர்களுக்கென பிரத்யேகமாக சத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. கலை திருவிழா, மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை புரிந்து வருகின்றனர். மேலும், ஒருங்கிணைந்த கல்வி மாவட்டத்தில் கடந்த 2018 - 19ம் ஆண்டு சிறந்த பள்ளி என்ற விருதை இப்பள்ளி பெற்றுள்ளது. பின்தங்கிய கிராமங்கிளில் இருந்து இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மேல்நிலை படிப்பிற்கு, விருத்தாசலம், மு.பரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்கு செல்ல வேண்டியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த 2 லட்சம் ரூபாய் கட்டப்பட்டுள்ளது. ஆனால், மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. பள்ளி தரம் உயர்த்தப்பட்டால் தங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்கும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். கூடுதல் பஸ் இயக்கப்படுமா? இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் அரசு பஸ்சில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். பள்ளி முடித்து வீட்டிற்கு செல்லும் நேரத்தில் அரசு பஸ் இயக்கப்படாததால், மாணவர்கள் வெகுநேரம் காத்திருந்து மாணவர்கள் பஸ் ஏறிச்செல்லும் நிலை உள்ளது. எனவே, மாலை 4:30 மணிக்கு விருத்தாசலத்தில் இருந்து மு.பரூர் வரை அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கென போதிய வகுப்பறை கட்டடம் இல்லாததால், மாணவர்களை ஒரே வகுப்பில் அமர்த்தி பாடம் நடத்தும் நிலை உள்ளது. கூடுதல் வகுப்பறை கட்டடம் இருந்தால், மாணவர்களை இரண்டு, மூன்று பிரிவுகளாக பிரிந்து, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும். எனவே, கூடுதல் கட்டடம் வேண்டும் என்பது ஆசிரியர், மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. பேட்டிகள்.. எங்கள் வீட்டு பிள்ளைகள் போல் ஒழுக்கத்துடன் கல்வி கற்பிப்பு எங்கள் வீட்டு பிள்ளைகள் போல் பாவித்து அனைத்து மாணவர்கள் மீதும் தனிக்கவனம் செலுத்தி, ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை கற்பித்து வருகிறோம். பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால், வகுப்பறை நேரங்களில் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. எனவே, சுற்றுச்சுவர் அமைத்து கொடுத்தால், மாணவர்களின் கவனச் சிதறலை தடுக்க முடியும். மேலும், பாதுகாப்பு சூழல் உருவாகும். -எழில்ராணி, தலைமை ஆசிரியர் பொதுத்தேர்வில் கணிதம் பாடத்தில் 100 சதவீத தேர்ச்சி கடந்த 2010ம் ஆண்டு முதல் இப்பள்ளியில் பணிபுரிகிறேன். கணிதம் பாடம் நடத்துகிறேன். ஆண்டுதோறும் பொதுத்தேர்வில் மாணவர்கள் அனைவரும் கணித பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். பொதுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெறுகின்றனர். மாணவர்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறேன். -பிரேமா, உதவி தலைமை ஆசிரியர், இப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிவதில் மகிழ்ச்சி இந்த பள்ளியில் 15 ஆண்டுகளாக ஆங்கில ஆசிரியராக பணிபுரிகிறேன். அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். தொடர்ந்து நுாறு சதவீதம் தேர்ச்சியும் கொடுத்து வருகிறேன். மாணவர்களுக்கு சமூக அக்கரை, சகோதரத்துவம், குடும்ப சூழல் மற்றும் அவர்களின் பொறுப்புணர்ச்சி ஆகியவற்றையும் பாடத்துடன் சேர்த்து எடுத்துகூறி வருகிறேன். மாணவர்களின் வாழ்கையில் ஒளியேற்றும் ஆசிரியராக பணிபுரிவதில் மகிழ்ச்சியடைகிறேன். -வெற்றிவேல், ஆங்கில பட்டதாரி ஆசிரியர். மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துகிறேன் கடந்த 14 ஆண்டுகளாக அறிவியல் பாடத்தில் நுாறுசதவீத தேர்ச்சி வழங்கி வருகிறேன். மாணவர்களுக்கு சனி, ஞாயிறு கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் அறிவியல் பாடத்தில் 80 சதவீத மதிப்பெண் பெற்று வருகின்றனர். ஏழை, எளிய மாணவர்கள் அனைவரும் அறிவியல் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதனால்தான் அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்து பாடம் நடத்தி வருகிறேன். -சுப்ரமணியன், அறிவியல் ஆசிரியர் நற்சிந்தனைகளை எடுத்துக் கூறுகிறேன் நான் கடந்த 17 ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன். மாணவர்களுக்கு அன்பு, பணிவு, ஒழுக்கம், சமூக அக்கரை, போன்ற நற்சிந்தனைகளை கல்வி மூலம் எடுத்து கூறினால் மட்டுமே இளைய தலைமுறையை நல்வழிபடுத்த முடியும். அந்த வழியில் பாடம் நடத்தி வருகிறேன். சிற்பத்தை செலுக்கும் சிற்பி போல, கல்வியோடு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, மனிதநேயம் ஆகியவற்றை கற்பித்தால் மட்டும் சிறந்த கல்வியாளனாக விளங்க முடியும் என்பதில் தெளிவாாக உள்ளேன். -அறிவுக்கரசி, அறிவியல் பட்டதாரி ஆசிரியர், முழு அர்ப்பணிப்புடன் பாடம் நடத்துகிறோம் நான் கடந்த 15 ஆண்டுகளாக ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன். வரும் காலங்களில் கல்வியில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் நவீனமயமாகப்பட்டால், அந்த முறையை வரவேற்கிறேன். நவீன் வழியில் பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்க ஆவலாக உள்ளேன். பள்ளி தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் ஆகியோரின் சீரிய முயற்சியாலும் இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களாகிய எங்களின் முழு அர்ப்பணிப்பாலும் பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறுகின்றனர். -பிரிசில்லாமேரி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்த முயற்சிக்கிறேன் கடந்த 11 ஆண்டுகளாக ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன். உலக பொதுமொழியான ஆங்கிலத்தை மாணவர்கள் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் ஆங்கிலத்தை மேலோட்டமாக படிக்காமல், ஆழ்ந்து படிக்க வேண்டும். அதனால்தான், நான் பாடவேளைகளில் வகுப்பறையில் மாணவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடுவேன். மாணவர்கள் ஆங்கில பேச்சுதிறனை மேம்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு பாடம் நடத்தி வருகிறேன். பாத்திமா, ஆங்கில பட்டதாரி ஆசிரியர்