உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அடிப்படை வசதிகள் கேள்விக்குறி கடலுார் பஸ் நிலையத்தில் பயணிகள் தவிப்பு  

அடிப்படை வசதிகள் கேள்விக்குறி கடலுார் பஸ் நிலையத்தில் பயணிகள் தவிப்பு  

கடலுார் : கடலுார் பஸ் நிலையத்தில், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, சேலம், புதுச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் தினசரி இயக்கப்படுகின்றன. தினசரி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் செல்கின்றனர். பஸ்கள் நிறுத்த இட வசதி பற்றாக்குறை உள்ளது. இதனால் பஸ்கள் ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்த முடியாத சூழல் உள்ளது. பஸ்களை தேடி வரும் பயணிகள் அதற்குரிய இடத்தில் காணாமல் தேடிப்பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. நாளுக்கு நாள் பயணிகள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், பயணிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளுக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டன. ஆனால், அவைகள் பராமரிப்பின்றியும், நாற்காலிகள் சேதப்படுத்தப்பட்டு ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால், பயணிகள் உட்கார இடமின்றி, நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுகாதாரமான குடிநீர் வசதியின்றி பயணிகள் காசு கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கி குடிக்க வேண்டிய நிலை உள்ளது. இலவச கழிவறை, கட்டண கழிவறையில் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. பஸ் நிலையத்திற்குள் தடையை மீறி கார் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் காத்திருக்கும் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக போதை நபர்களின் நடமாட்டம் உள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பும், மாவட்டத்தின் தலைநகராக இருந்தும் கடலுார் பஸ் நிலையம் அடிப்படை வசதிகளில் மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், போதிய அடிப்படை வசதிகள் மற்றும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ