கண்ணாடி உடைந்த அரசு பஸ் பயணிகள் திக்... திக்... பயணம்
கடலுார் : விழுப்புரத்தில் இருந்து சேலம் சென்ற அரசு பஸ்சில் முன்புற கண்ணாடி உடைந்த நிலையில், பயணிகள் ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். விழுப்புரம் - சேலம் அரசு பஸ் (டி.என்.32 - என்.4873), நேற்று பிற்பகல் 2:10 மணிக்கு, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பஸ்சின் முன்புற கண்ணாடி இரு இடங்களில் உடைந்து, விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ் டிரைவர் மிதமான வேகத்திலேயே பஸ்சை ஓட்டிச் சென்றார். காற்றின் வேகம் அதிகமாக இருந்தால், கண்ணாடி உடைந்து, பயணிகள் காயமடையும் அபாயம் உள்ளது. தமிழக போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிதாக வழங்கிய மஞ்சள் நிற எக்ஸ்பிரஸ் பஸ் என்றாலும், கண்ணாடியை சரி செய்யாததால் பயணிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. 100 கி.மீ., தொலைவுக்கு அதிகமாக இயங்கும் இதுபோன்ற பஸ்களை பழுது நீக்கி இயக்க வேண்டுமென, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.