காலி குடங்களுடன் மக்கள் மறியல்: போக்குவரத்து பாதிப்பு
விருத்தாசலம்: குடிநீர் வழங்க கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம் அடுத்த க.இளமங்கலம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராம மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்தமாதம் அப்பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக குடிநீர் பைப் லைன் சேதமடைந்தது. இதனால், கடந்த ஒரு மாதங்களுக்கு மேல் அப்பகுதி மக்கள் குடிநீர் தேடி அலையம் அவலம் ஏற்பட்டது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை, 9:00 மணியளவில், விருத்தாசலம் - தீவளூர் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், காலை 10:00 மணியளவில், அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.