பா.ஜ., ஆர்ப்பாட்ட தகவல்; போலீஸ் குவிப்பால் பரபரப்பு
பெண்ணாடம்; பெண்ணாடம் பகுதி டாஸ்மாக் கடை முன்பு பா.ஜ., ஆர்ப்பாட்டம் நடத்துவதாக எழுந்த தகவலால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பெண்ணாடம் மற்றும் பெ.பொன்னேரி, மாளிகைக்கோட்டம், நந்திமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளின் முன்பு பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக நேற்று பகல் 1:00 மணியளவில் பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெண்ணாடம் பகுதியில் உள்ள 4 டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. தொடர்ந்து, கருவேப்பிலங்குறிச்சி, ஆவினங்குடி போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். ஆனால் எந்த டாஸ்மாக் கடைகளின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடக்கவில்லை. பின்னர் 2:00 மணியளவில் அந்தந்த ஸ்டேஷனுக்கு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.டாஸ்மாக் கடைகளின் முன்பு பா.ஜ., ஆர்ப்பாட்டம் நடத்துவதாக எழுந்த வதந்தியால் பெண்ணாடத்தில் போலீஸ் குவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.