என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர் ஊர்வலத்திற்கு போலீஸ் தடை
கடலுார்: கடலுாரில் என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுக்க முயன்றதை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மனு கொடுப்பதாக அறிவித்திருந்தனர். இதையொட்டி, நேற்று கடலுார் தபால் நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலகம் முன் போலீசார் குவித்தனர். இதை தொடர்ந்து, என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சிறப்பு தலைவர் சேகர் தலைமை தாங்கினார். ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு, என்.எல்.சி., நிறுவனத்தில் ஒப்பந்த மற்றும் சொசைட்டி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இப்பிரச்னையில் தமிழக அரசு, உடனடியாக தலையிட வேண்டும். 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.அப்போது, டி.எஸ்.பி.,க்கள் ரூபன்குமார் தலைமையிலான போலீசார் ஊர்வலமாக செல்ல அனுமதி கிடையாது என்று கூறினர். இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் 5 பேர் மட்டும் அங்கிருந்து சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இச்சம்பவத்தால் கடலுாரில் பரபரப்பு ஏற்பட்டது.