ரூரல் ஃபீடரில் மின்தடை கிராம மக்கள் பாதிப்பு
கடலுார் : பெரியகங்கணாங்குப்பம் ரூரல் ஃபீடரில் அடிக்கடி மணிக்கணக்கில் மின் தடை ஏற்படுவதால் 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கடலுார், பெரியகங்கணாங்குப்பம் ரூரல் ஃபீடரில் பெரிய கங்கணாங்குப்பம், உச்சிமேடு, நாணமேடு, சுபா உப்பலவாடி ஆகிய பெரிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சுற்றிலும் 15க்கும் மேற்பட்ட புதிய நகர்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு மின்வாரியம் சார்பில் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒயர்கள் போடப்பட்டது. தற்போது மிகவும் உலுத்துப்போய் எப்போது வேண்டுமானலும் அறுந்து விழும் நிலையில் உள்ளது. அவ்வப்போது, இன்ஸ்லேட்டர் வெடிப்பது, ெஹச்டி லைன் அறுந்து விழுவது, பறவை அடிப்பது போன்ற காரணங்களால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இது தவிர மஞ்சக்குப்பம் நகரத்திற்கு சப்ளை வழங்கப்படும் மின்பாதையும், கங்கணாங்குப்பம் ரூரல் ஃபீடருக்கு செல்லும் மின் பாதையும் ஒரு இணைப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இரவு, பகல் என, எந்த நேரத்திலும் மின் தடை ஏற்படுகிறது. நள்ளிரவு நேரங்களில் மின்தடை ஏற்படாத நாளே இல்லை என்று கூட சொல்லலாம். பகல் பொழுதில் மின் தடை ஏற்படுவதை ஓரளவு சரி செய்தாலும் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையை சீரமைக்க பல மணி நேரங்கள் ஆகிறது. மின்வாரிய ஊழியர்களும் குறைவாக இருப்பதால் மின் தடையை சரி செய்வது பெரும் பிரச்னையாக உள்ளது. எனவே, மழை காலத்தை கருத்தில் கொண்டு கங்கணாங்குப்பம் ரூரல் ஃபீடரை தனியாக பிரித்து சப்ளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.