பருவ மழைக்கு முன் முடிக்க வேண்டிய திட்டப் பணிகள் மந்தம்! பெண்ணையாறு, அருவாமூக்கு பணிகள் நிறைவேறுமா?
கடலுார்: கடலுாரில் தென்பெண்ணையாறு கரைகள் பலப்படுத்துதல், அருவா மூக்கு திட்டம் போன்ற, பருவமழைக்கு முன்பு முடிக்க வேண்டிய திட்டப்பணிகள் மந்தகதியில் நடப்பதால் வெள்ள காலத்தில் பயன்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த ஆண்டு வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் டிசம்பர் 30ம் தேதி புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதனால் புதுச்சேரியில் 50 செ.மீ., கடலுாரில் 23 செ.மீ., மழை கொட்டித்தீர்த்து வெள்ளக்காடாக்கியது. அதைத்தொடர்ந்து புயல் கடந்த சென்ற பாதை பகுதி முழுவதும் அதிகனமழை கொட்டியது. இதன்காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாத்தனுார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அணைக்கு உபரியாக வரும் தண்ணீரை முழுவதுமாக பாதுகாப்பு கருதி வெளியேற்றியதில் 2 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர், சுபா உப்பலவாடி, புதுக்குப்பம் முகத்துவாரங்கள், வழியாக சென்று வங்கக்கடலில் கலந்தது. இந்த வெள்ள நீர் முழுமையாக கடலுக்கு செல்லாமல் வடக்கு கரையோர கிராமங்களான நாணமேடு, உச்சிமேடு கிராமங்களும், தெற்கு கரையோர கிராமங்களான கண்டக்காடு, தாழங்குடா கிராமங்களிலும் வெள்ளநீர் ஓடிச்சென்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பெண்ணையாற்றில் பாதிப்பு ஏற்படுத்தும் பகுதிகளில் முதற்கட்டமாக மஞ்சக்குப்பம் முதல் குண்டு உப்பலவாடி கிராம் வரை நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் 9.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 160 மீ ஆர்.சி.சி தடுப்புச்சுவர் அமைக்கும் பணி, 575மீ சரிவுச்சுவர் அமைக்கும் பணி, நகரம் மற்றும் கிராமங்களில் பெய்கின்ற மழைநீர் வடிவதற்கு வடிகால் மதகு அமைத்தல், 2100 மீ பெண்ணையாற்றின் வலது புற கரையினை பலப்படுத்தும் பணி, ஆற்றின் உட்பகுதியில் உள்ள மண்திட்டுகளை அகற்றும் பணிகள் செய்வதாக இருந்தது. இத்திட்டங்கள் சிலவற்றை மாற்றி அமைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து அதனால் இந்த ஆண்டு வெள்ள காலத்திற்குள் பெண்ணையாறு கரையை சீரமைக்கவும், ஆற்றில் உள்ள மணல் மேட்டை அகற்றிடவும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் இருந்து தண்ணீர் வடிவதற்காக ஷட்டர் அமைக்கவும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் 2வது கட்டமாக 57 கோடியில் குண்டு உப்பலவாடி பாலத்தில் இருந்து 900 மீட்டர் அணைக்கு பாதுகாப்பாக கருங்கல் கொட்டுதல். ஓம்சக்தி நகரில் இருந்து தண்ணீர் வடிவதற்கு வடிகால் ஷட்டரும், ஏற்படுத்தப்படவுள்ளன. பெண்ணையாற்றின் மையத்தில் உள்ள மணல் திட்டு முழுவதுமாக அகற்றி கண்டக்காடு, தாழங்குடா போன்ற பகுதிகளில் போடப்பட்டுள்ள அணைகள் பலப்படுத்தப்படுவதாக கூறப்பட்டன. இவையாவும் பல இடங்களில் பணிகள் மாற்றப்பட்டு செய்யப்பட்டு வருகின்றன. மணல் திட்டை முழுவதும் அகற்றியபாடில்லை. கடந்த ஆண்டு உடைந்த கரையை கூட இதுவரை சீரமைக்கப்படவில்லை. பருவ மழை விரைவில் துவங்க உள்ள நிலையில் இப்பணிகள் இனி முடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. மேலும் புதுச்சத்திரம் அருகே அருவா மூக்கு திட்டம் 81 கோடி ரூபாயில் துவங்கப்பட்டது. வெள்ளக்காலத்தில் தண்ணீர் நிரம்பி கடலில் வடிவதற்கு தாமதமாகும் என்பதால் இந்த திட்டத்தை துவக்கினர். இந்த திட்டமும் இதுவரை முடிவுக்கு வரவில்லை. இப்படி வெள்ளக்காலத்திற்குள் முடிக்க வேண்டிய திட்டங்கள் யாவும் தாமதமாகி வருவதால் மக்கள் மீண்டும் அவதிக்குள்ளாக வேண்டிய நிலைக்கு ஏற்படும் என்பதில் ஐயமில்லை.