வெலிங்டனில் தண்ணீர் திறக்க ஒப்புதல் காத்திருப்பு போராட்டம் வாபஸ்
திட்டக்குடி: திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன், வெலிங்டன் நீர்த்தேக்க பாசன பகுதி விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் மருதாசலம் தலைமை தாங்கினார். முன்னோடி விவசாயிகள் வையங்குடி கண்ணன், பூபதி, சிறுமுளை முத்துராமன், ஆதமங்கலம் குருநாதன் உட்பட கீழ்மட்ட கால்வாய் பாசன விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்தேக்கத்தில் இருந்து கீழ்மட்ட பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரி, தாலுகா அலுவலகம் முன் நேற்று விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த விருத்தாசலம் கோட்டம், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பிரசன்னா, தாசில்தார் உதயகுமார், உதவி பொறியாளர் வெங்கடேசன், சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், இன்று 24ம் தேதி, காலை 10:00 மணியளவில் கீ ழ்மட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என உறுதியளித்தனர். அதையேற்று, போராட்டத்தை 'வாபஸ்' பெற்று, பகல் 12:00 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர் .