சிதம்பரம் நகராட்சியோடு ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு பேச்சுவார்த்தையால் மறியல் போராட்டம் வாபஸ்
சிதம்பரம், : சிதம்பரம் அருகே ஊராட்சியை நகராட்சியோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிவிக்கப்பட்ட போராட்டம் பேச்சு வார்தை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. சிதம்பரம் நகராட்சியோடு, ஊராட்சிகளை இணைப்பதற்கு தொர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிதரம் மற்றும் சாலை மறியல் நடந்து வருகிறது. லால்புரம் ஊராட்சியில், தையாகுப்பம், பாலுாத்தாங்கரை, லால்புரம், உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகள் உள்ளது.அதிக அளவு விவசாய நிலங்கள் உள்ளதால், 100 நாள் வேலை திட்டத்தில் பலர் பயன்பெற்று வருகின்றனர். ஆகவே நகராட்சியோடு லால்புரம் ஊராட்சியை இணைக்க கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்த நேற்று காலை 50 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். லால்புரம் ஊராட்சிக்குட்பட்ட லால்புரம், பாலுத்தங்கரை கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர், முனிசங்கர், முன்னாள் ஊராட்சி தலைவர் நடனமயிலோன் ஆகியோர் தலைமையில், ஒன்று திரண்டு சிதம்பரம் - புவனகிரி சாலை லால்புரத்தில் மறியலில் ஈடுபட முயன்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் தாசில்தார் பிரகாஷ் (பொறுப்பு), டி.எஸ்.பி., லாமேக் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, மக்களின் கோரிக்கை மாவட்ட நிர்வாகதிடம் கொண்டு செல்லப்பட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர். அதையடுத்து, சாலை மறியல் போராட்டம் செய்ய கைவிடப்பட்டது.