மழைநீர் வெளியேறும் வாய்க்கால் துார்வார பொதுமக்கள் கோரிக்கை
நடுவீரப்பட்டு:சி.என்.பாளையம் அருந்ததியர் வாய்க்காலிருந்து வரும் மழைநீர் வெளியேறும் வழியை முழுமையாக துார்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் அருந்ததியர் வாய்க்கால் வழியாக வரும் மழைநீர் செல்ல வழியில்லாததால் சி.என்.பாளையம் சாலையில் ஓடி ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன் சி.என்.பாளையம்-சாத்திப்பட்டு சாலையில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக கல்வெர்ட் கட்டப்பட்டது. இந்த கல்வெர்ட் வழியாக வெளியேறும் மழைநீர் முழுமையாக கெடிலம் ஆற்றில் கலக்கும் வகையில் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. புதிதாக கல்வெர்ட் கட்டிய அதிகாரிகள் கடமைக்காக கல்வெர்ட்டிலிருந்து 20 மீட்டர் அகலத்திற்கு மட்டும் வாய்க்காலை சரி செய்து விட்டு சென்று விட்டனர். மற்ற இடங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மழைகாலத்தில் மழைநீர் முழுமையாக வெளியேற முடியாமல் மீண்டும் சாலையிலும், பக்கத்தில் உள்ள நிலத்தின் வழியாக வெளியேறி வருகிறது. எனவே, வாய்க்காலை முழுமையாக அளவீடு செய்து, துார்வாரி மழைநீர் கெடிலம் ஆற்றில் கலக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.