மாடு மீது பைக் மோதி விபத்து புது மாப்பிள்ளை பரிதாப சாவு
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே சாலையில் குறுக்கிட்ட மாடு மீது பைக் மோதிய விபத்தில், புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.காட்டுமன்னார்கோவில் அடுத்த ராஜசூடாமணியைச் சேர்ந்த இளங்கோவன் மகன் அஜித்குமார், 26; இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர், கடந்த 24ம் தேதி தனது மோட்டார் பைக்கில் சிதம்பரத்திற்கு பைபாஸ் ரோடு வழியாக சென்றார். எள்ளேரி மேம்பாலம் அருகே சென்றபோது, சாலையில் குறுக்கே சென்ற மாடு மீது பைக் மோதி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.தலையில் பலத்த காயத்துடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அஜித்குமார் நேற்று இறந்தார்.காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.