தண்ணீரின்றி காயும் நெற்பயிர்கள் புதுச்சத்திரம் விவசாயிகள் கவலை
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த மானம் பார்த்தான் வாய்க்காலில் தண்ணீர் வராத காரணத்தால் நெல் பயிர்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.புதுச்சத்திரம் சுற்றுப் பகுதியிலான வேளங்கிப்பட்டு, மணிக்கொள்ளை, பால்வாத்துண்ணான், அலமேலுமங்காபுரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் மானம் பார்த்தான் வாய்க்கால் மூலம் பாசனம் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு சம்பா பருவத்திற்கு விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது கதிர் வந்து பால் ஊறும் தருவாயில் இருக்கின்றது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் புகையான் தாக்குதல் அதிகரித்து வந்ததன் காரணமாக, இப்பகுதி விவசாயிகள் நெல் வயல்களில் இருந்து தண்ணீரை வடிகட்டி காய வைத்தனர். ஆனால் தற்போது நெல் பயிர்கள் பால் கட்டும் பருவம் உள்ள நிலையில் மானம் பார்த்தான் வாய்க்காலில் தண்ணீர் இல்லாமல் நெல் பயிர்கள் வெடித்து காய்ந்து வருகிறது. எனவே இப்பகுதி விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு மானம் பாத்தான் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.