இரு போலீசாருக்கு கத்தி குத்து புதுச்சேரி ஆசாமிக்கு மாவுகட்டு
காட்டுமன்னார்கோவில்:கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் தேவநாதன், 38; ஜெயராமன், 43, ஆகிய போலீசார் நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் - திருச்சி சாலையில், வாகன சோதனை செய்தனர்.அப்போது, சிதம்பரம் நோக்கி பைக்கில் வந்த ஆசாமியை நிறுத்தி, சோதனை செய்த போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த பைக் ஆசாமி, மறைத்து வைத்திருந்த கத்தியால் இரு போலீசாரையும் குத்தி விட்டு தப்பிச் சென்றார்.தேவநாதனுக்கு தலை, கழுத்து, கை ஆகிய இடங்களிலும், ஜெயராமனுக்கு கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சிறப்பு படை போலீசார் வழக்கு பதிந்து, போலீசாரை கத்தியால் குத்திய ஆசாமியை தேடினர். விசாரணையில் அவர், புதுச்சேரி மாநிலம் கிளிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த விஸ்வநாதன், 40, பெயின்டர் என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். ஜீப்பில் அழைத்து வந்தபோது கீழே குதித்த விஸ்நாதனின் கை முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.