புதுவை தொழிலதிபரிடம் ரூ.1.27 கோடி மோசடி
புதுச்சேரி:புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர், சேதராப்பட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு ஏப்., 13ல் 'வாட்ஸாப்' எண்ணிற்கு குறுஞ்செய்தியாக, 'லிங்க்' வந்தது.அதில், 'நீங்கள் இந்த வாட்ஸாப் லிங்கில் இணைந்தால், பங்குச்சந்தை தொடர்பான அனைத்து விபரங்களும் கற்றுக் கொடுக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. தொழிலதிபர் அந்த லிங்கில் இணைந்தார். அவருக்கு, லிங்க் வாயிலாக பங்குச்சந்தை முதலீடு தொடர்பாக சில நாட்கள் வகுப்பு எடுக்கப்பட்டன.தொடர்ந்து, தொழிலதிபர், மர்ம நபர் கொடுத்த லிங்கில் பணத்தை முதலீடு செய்துள்ளார். அவர், 20 லட்சம் ரூபாய் முதலீடு செய்தபோது, அவருடைய தனிப்பட்ட கணக்கில், 1.05 கோடி ரூபாய் இருப்பது போன்று காட்டியது.நம்பிய தொழிலதிபர், 10 நாட்களில், 1.27 கோடி ரூபாய் முதலீடு செய்தார். அவருடைய கணக்கில், 6.64 கோடி ரூபாய் இருப்பது போல காட்டியது. அந்த பணத்தை எடுக்க முயற்சி செய்தபோது, முடியவில்லை. அதிகப்படியான லாபம் கிடைத்துள்ளதால் ஜி.எஸ்.டி., வருமான வரி கட்ட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகே, போலி பங்குச்சந்தையில் முதலீடு செய்து பணத்தை இழந்திருப்பது தெரியவந்தது. புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் அவர் அளித்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.