முன்னாள் எம்.எல்.ஏ.,வை நீக்கி ராமதாஸ் அதிரடி கடலுார் மாவட்டத்தில் பா.ம.க.,வினர் அதிர்ச்சி
பா . ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே அதிகார மோதல் உச்சத்தை எட்டிய நிலையில், இருவருக்கும் எதிராக களமிறங்குவோரை நீக்கும் செயலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பா.ம.க., நிலை என்னவாகுமோ என சமூக வலைதளங்களில் இருதரப்பினர் மத்தியில் மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பா.ம.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர் என பேசப்பட்டவர், விருத்தாசலம் முன்னாள் எம்.எல்.ஏ.,வும் அக்கட்சியின் சொத்து பாதுகாப்புக்குழு தலைவருமான டாக்டர் கோவிந்தசாமி. ராமதாஸ், அன்புமணி என யாராக இருந்தாலும், கடலுார் மாவட்டம் வரும்போது கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று உணவு சாப்பிட்டு விட்டுச் செல்வது வழக்கம். ஆனால், முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, நிறுவனர் ராமதாசை புறக்கணித்து, அன்புமணிக்கு ஆதராவாக செயல்பட்டார். மக்கள் உரிமை மீட்பு பயண நடைபயணம் துவங்கி, பல்வேறு கூட்டங்களில் பங்கேற்று, அன்புமணிக்கு ஆதரவாக பேசினார். கடும் அதிருப்தியில் இருந்த ராமதாஸ், மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் பதவியில் இருந்து கோவிந்தசாமியை நீக்கி நேற்று அறிவித்தார். இவருக்கு பதிலாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் முனிராஜ் என்பவர் நியமிக்கப்பட்டார். விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி, புவனகிரி உட்பட மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகள் மட்டுமல்லாது விழுப்புரம், அரியலுார் மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் மேலிடத்தில் நெருக்கமான நபர் என கோவிந்தசாமி மீது அக்கட்சி நிர்வாகிகள் மிகுந்த ஈடுபாட்டில் இருந்தனர். அவரது நீக்கம், பா.ம.க., நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.