டிராக்டர் மோதி சிறுமி பலி உறவினர்கள் மறியல் முயற்சி
கடலுார் : கடலுார் அருகே டிராக்டர் மோதி சிறுமி இறந்த சம்பவத்தில், டிராக்டரின் உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யக் கோரி சிறுமியின் உறவினர்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் அடுத்த திருப்பணாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம்,40. இவரது மகள் பிரதிக் ஷா,4. பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் யூ.கே.ஜி., படித்தார். நேற்று முன்தினம் பள்ளி சென்று வந்து வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார்.இரவு 7.00 மணியளவில் அவ்வழியாக வந்த பதிவெண் இல்லாத டிராக்டர் மோதியதில் சிறுமி பலத்த காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து சிறுமியை மீட்டு பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.புகாரின் பேரில் துாக்கணாம்பாக்கம் போலீசார், டிரைவர் அருள்தாஸ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.டிராக்டரின் உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி சிறுமியின் உறவினர்கள், நேற்று மாலை 3.45 மணிக்கு கடலுார் அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். டி.எஸ்.பி., ரூபன்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.