விருத்தாசலம் அரசு பள்ளியில் மரங்கள் வெட்டி அகற்றம்
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் நுாற்றாண்டு விழா கண்ட அரசு மேல்நிலைப் பள்ளியில், பழமையான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருத்தாசலத்தில், கடலுார் சாலையில் நுாற் றாண்டு விழா கண்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.இங்கு 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில், குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் தன்னிறைவாக இல்லை.கடந்த சில மாதங்களுக்கு முன் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பள்ளி வளாகத்தில் கலையரங்கள், அலங்கார வளைவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டன. மேலும் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள், தனியார் மருத்துவ முகாம்கள் வாரந்தோறும் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், பள்ளி வளாகத்தில் இருந்த பழமையான வேம்பு, தைல மரங்கள் கடந்த சில நாட்களுக்கு முன் வெட்டி அகற்றப்பட்டுள்ளன.தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தி, முன்னுதாரணமாக இருந்து வரும் நிலையில், நுாற்றாண்டு கண்ட அரசு பள்ளியில் பழமையான மரங்கள் வெட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக டி.இ.ஓ., விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.